2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம், வழக்கில் ஆதாரம் எதுவும் இல்லை என்று 17 பேரையும் கடந்த 2017ம் ஆண்டு விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது. ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். எனவே, 2ஜி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அக்டோபர் 5-ம் தேதிமுதல் தினந்தோறும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உறுதியளித்தது.
இதன்படி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு இன்றுமுதல் தினமும் விசாரிக்கப்பட உள்ளது.இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2ஜி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முதலில் சிபிஐ மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஓய்வுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.