வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள்.


 வேலூரில் ரத்து செய்யப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 11 அன்று தொடங்கியது. தேர்தலில் போட்டியிட 50 பேர் மனு  தாக்கல் செய்திருந்தார்கள். கடந்த 18-ம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19 அன்று நடைபெற்றது.

 
வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 31 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 19 பேருடைய வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்ப பெற  நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.  சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஜே.அசேன் உள்பட இரு சுயேட்சைகள் நேற்றைய தினம் மனுக்களை வாபஸ் பெற்றனர். எனவே 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


 ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவிய நிலையில், இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறு கட்சிகளைச் சேர்ந்த 7 பேரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களைத் தவிர 18 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.