பொங்கல் திருநாளையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். ஆனால், ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில்  ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் மு.க. ஸ்டாலின் பேசும்போது இதை தெரிவித்தார்.
 “கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி தமிழ்நாட்டு மக்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது. எடப்பாடி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால், இதுவரை 8,04,650 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். 11,954 உயிர்களை நாம் இழந்தோம். பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அதை எடப்பாடி அரசு தரவில்லை.


 ஆனால், இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்காக 2,500 ரூபாய் தரப்போவதாக அறிவித்துள்ளார். மக்கள் கஷ்டப்படும்போது தராமல், நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால், தனது சுயநலத்திற்காகத் தருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடுக்கட்டும் பரவாயில்லை. கொரோனாவிலும் பாதிக்கப்பட்டு, அண்மையில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவியை இப்போதாவது வழங்குங்கள் என்று தி.மு.க சார்பிலும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் மீண்டும், மீண்டும் முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.