நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் இலக்கு...! செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்ற பாஜக முடிவு
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் தீவிரம் காட்டும் வகையில் செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணி தீவிரம்
மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது பாஜக . இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய பாஜக தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. எனவே தேர்தல் பணியில் தீவிரம் காட்டும்படி மாநில தலைமைக்கு உத்தரவிட்டது. ஏற்கனவே 18 மாநிலங்களில் பாஜக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இந்த மாநிலங்களில் மட்டுமிட்டாமல் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான எம்பிகளை கொடுக்க வேண்டும் என மத்திய பாஜக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 25 தொகுதிகள் இலக்கு
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, அடுத்தபடியாக பாஜக அதிக வாக்குகளை பெற்றது. இதனால் உற்சாகத்தில் உள்ள பாஜக அடுத்த இலக்காக நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகளை துவக்கும்படி ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார். மேலும் கட்சி பணிகளை தீவிரம் காட்டாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் பாஜகவில் உள்ள பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் மாற்றப்பட வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 25க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
பாஜக- அதிமுக கூட்டணி?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில், ஓட்டுகள் சிதறி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. எனவே பாஜகவின் 25 தொகுதிகள் என்ற இலக்கு என்ன ஆகும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.