இனி சற்றும் தாமதிக்காமல் அயோத்தியில் உடனே ராமர் சிலையை நிறுவியே ஆகவேண்டும் என மிரட்டும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் தற்போது அயோத்தியில் நடந்து வருகிறது.  இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அயோத்தியில் 221 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலை அமைக்கப்படுமென்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்பது இந்துத்துவா அமைப்புகளின் வாதம். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தர்மசபா கூட்டத்தை அயோத்தியில் இன்று கூட்டியுள்ளனர். இக்கூட்டத்தின் விளைவாக ‘92ல் நடந்தது போல் மீண்டும் கலவரம் நடக்க வாய்புள்ளது என்று கருதப்பட்ட நிலையில், ராம பக்தர்களை சாந்தப்படுத்தும் விதத்தில் சமீபத்தில் எழுப்பப்பட்ட படேல் சிலையைவிட அதிக உயரமாக ராமருக்கு சிலை அமைக்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, சரயு நதிக்கரையில் அமையவுள்ள சிலையின் பீடத்தின் உயரம் 50 மீட்டரில் உருவாக்கப்படும். சிலையின் உயரம் 151 மீட்டராகவும், சிலைக்கு மேல் உள்ள குடையின் உயரம் 20 மீட்டராகவும் அமையுமாம். இந்த சிலை வெண்கலத்தால் அமைக்கப்பட உள்ளது . அயோத்தியின் சிறப்புமிக்க வரலாற்றை விளக்கும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. தற்போது, சிலை அமைய உள்ள இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 கடந்த அக்டோபர் 31- ம் தேதி 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மும்பையில் வீரசிவாஜி சிலை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் மாண்டாயா மாவட்டத்தில் கே.எஸ்.ஆர் அணைக்கட்டு பகுதியில் காவிரி அன்னைக்கு ரூ.360 கோடி செலவில் பிரமாண்ட சிலை அமைக்கப் போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் மேலும் பிச்சைக்காரர்களாக ஆகிவரும் நிலையில்,  சமீபகாலமாக அதிக அளவில் பிரமாண்டமான சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.