அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை மையமாக வைத்து மல்லுக்கட்டு நடைபெற்று வந்த நிலையில் திமுக கூட்டணியில் சத்தமே இல்லாமல் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் மல்லுக்கட்டு நடைபெற்று வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் மட்டும் அல்ல நாடாளுமன்ற தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக தொகுதிகளை வாரி வழங்கியது. காங்கிரஸ் கட்சிக்கு தொண்டர்களே இல்லாத தொகுதிகள் கூட அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2011 தேர்தல் சமயத்தில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளரை கூட தேர்வு செய்து நிறுத்த முடியவில்லை. இந்த அளவிற்கு தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தாலும் மத்தியில் அந்த கட்சியின் உதவி தேவை என்பதால் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் – புதுச்சேரியில் சேர்த்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தேனியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான தொகுதிகளில் வெற்றியை கொடுத்து அந்த கட்சியின் மானத்தை இந்திய அளவில் தமிழகம் காப்பாற்றியது இல்லை இல்லை திமுக காப்பாற்றியது என்றே கூறலாம். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த காலங்களில் கொடுத்ததை போல் தொகுதிகளை கொடுக்க திமுக தயாராக இல்லை என்கிறார்கள்.

ஏனென்றால் கடந்த முறை காங்கிரசுக்கு திமுக 41 தொகுதிகளை வழங்கியது. ஆனால்அவற்றில் வெறும் எட்டில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது. அந்த 41 தொகுதிகளில் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 33 தொகுதிகளில் மிக எளிதாக வென்றார்கள். இதன் மூலமாகவே அதிமுகவிற்கு கடந்த முறை பெரும்பான்மை கிடைத்தது என்றே கூறலாம். ஏனென்றால் நேரடியாக திமுக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கிய அதிமுக வேட்பாளர்கள் அதிகம் தோல்வியை தழுவினர். அந்த வகையில் கடந்த முறை காங்கிரசுக்கு தொகுதிகளை குறைத்து அங்கு திமுக நின்றிருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும்.

இந்த கணக்கை இந்த முறை சரியாக போடுவதில் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மிக உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். அதே போல் சுமார் 200 தொகுதிகள் வரையிலாவது திமுகவின் உதய சூரியன் சின்னம் களத்திற்கு வரவேண்டும் என்றும்அவர் திட்டவட்டமாக இருக்கிறார். விசிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு எல்லாம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கண்டிப்புடன் கூறி வருவதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு மிக அதிகபட்சமாக 21 தொகுதிகள் தான் என்று பிரசாந்த் கிஷோர் திமுக மேலிடத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள். அதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட, திமுகவும் அதனை ஏற்றுக்கொண்டதாக சொல்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என்று திமுக மேலிடம் தகவலை பாஸ் செய்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்த தகவலை கேட்டு கே.எஸ்.அழகிரி அரண்டு போய்விட்டதாகவும் அடுத்து என்ன செய்வது என்று மேலிடத்துடன் ஆலோசனையில் இருப்பதாக சொல்கிறார்கள். இதன் பின்னணியில் காங்கிரசை கூட்டணியில் இருந்து கழட்டிவிடும் ஒரு வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது. பாமகவை மனதில் வைத்து காங்கிரசை கழட்டிவிட்டு கூட்,டணி மாற்றத்திற்கான வாய்ப்புகளையும் திமுக யோசித்து வருவதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.