மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் தமிழக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனக் கூறி அப்போதைய தமிழக ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் அளித்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என 18 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சபாநாயகர் நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிக்காததால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இவர்கள் 18 பேர் எம்.எல்.ஏ. பதவியை இழந்தனர். 

இதையடுத்து திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மறைவால், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாகின. இதையடுத்து ஒசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கு வழக்கு ஒன்றில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். 

இந்நிலையில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றே தினமே தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதியும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கையுன் முடிவு மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.