தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கண்டிப்பாக மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் கொரோன தொற்றால் 5,299 டாஸ்மாக் கடைகளில், சென்னையில் இருக்கும் 536 கடைகள் தவிர்த்து பிற கடைகள் இன்று முதல் செயல்பட்டது. 43 நாட்கள் சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்ட குடிமகன்கள்  சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால், டாஸ்டாக் திறந்ததால் தமிழக அரசு மீது பெண்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள அரசு மதுக்கடைகளில் இருந்து தினமும் ரூ.120 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்த வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூலம் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரையிலான 40 நாட்கள் அரசுக்கு ரூ.4,800 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்றாலும் அந்த வருவாயில் 90 சதவீதத்துக்கும் மேலான வருவாய் சாதாரண நடுத்தர மற்றும் கூலித்தொழிலாளர்களின் வருமானத்தில் இருந்து மதுக்கடைகளுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் அரசு கிடைக்க வேண்டிய வருவாய் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்பட்டுள்ளது. குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மதுவுக்கு செலவிட்ட தொகையை குடும்பத்துக்கு செலவழிக்கும் நிலை உண்டானது என்பது பெரும்பான்மை குடும்ப பெண்களின் கருத்து.

இந்நிலையில், மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டடுள்ளது மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  அதேபோல் பலரும் கூறுவது போல மதுக்கடை முற்றிலுமாக மூடுவது குடிமகன்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திடீரென அவற்றை மூட முடியாது. படிப்படியாக மூட நடவடிக்கை மேற்கொள்ளலாம். பூரண மதுவிலக்கு என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டம் அது செயல்பட தமிழக அரசுக்கு தயக்கம் தேவையில்லை.

அதேவேளையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள 27 ஆயிரம் பணியாளர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாற்றும் பணியாக வழங்கலாம். மேலும், டாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக மாற்று வழியை அரசு உருவாக்க வேண்டும். இதையெல்லாம் செயல்படுத்த ஒரு குழு அமைத்து அரசு முடிவெடுத்தால் அதன் பயனை சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கண்டிப்பாக பெற வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.