2021 சட்டமன்ற தேர்தல்... தமிழக அரசியல் களத்தை தீர்மானிக்கப்போகும் 2 கன்னடர்கள்..!
அடுத்த ஆண்டு தமிகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக இரண்டு கன்னடர்கள் உருவெடுத்துள்ளனர்.
அடுத்த ஆண்டு தமிகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக இரண்டு கன்னடர்கள் உருவெடுத்துள்ளனர்.
தமிழக தேர்தல் களம் எப்போதுமே கூட்டணியை அடிப்படையாக கொண்டதாகவே இருந்து வந்தது. கடந்த முறை கூட்டணியே இல்லாமல் ஜெயலலிதா வென்றதற்கு காரணம் திமுக வலுவான கூட்டணி அமைக்கத் தவறியது தான். இதே போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிரப்பு அலை இருந்த நிலையில் அதனை காங்கிரசுடன் கூட்டணி வைத்து திமுக முழுமையான வெற்றியாக அறுவடை செய்தது. அதே சமயம் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது.
ஆனால் கூட்டணி அமைப்பதில் இரண்டு தேசிய கட்சிகளும் தமிழகத்தில் மிக முக்கிய பங்காற்றின. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தலா ஒரு தேசிய கட்சி இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வாய்ப்புள்ளது. இதே போல் பாஜக அதிமுக கூட்டணியில் தொடரும் சூழல் தெரிகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பு உள்ளது. இதனை பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக கூறியுள்ளார். இதே போல் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் கூட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் வரை இருக்கும் என்று சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.
எனவே தமிழக அரசியலை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறிவிட முடியாது. அப்படியானல், கூட்டணி இனி தான் முடிவு செய்யப்படும். அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் இடத்தில் தினேஷ் குண்டுராவ் எனும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் இருக்கிறார். இவர் தான் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர். இதற்கு முன்பு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஷ்னிக் மாற்றப்பட்டு தினேஷ் குண்டுராவ் வந்துள்ளார்.
காங்கிரசை பொறுத்தவரை மாநில ரீதியிலான அரசியல் விவகாரங்களை இறுதி செய்வது இந்த மேலிடப் பொறுப்பாளர்கள் தான். கூட்டணியை மேலிடம் உறுதி செய்தாலும் தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதியில் போட்டி என்பதை முடிவு செய்வது மேலிடப் பொறுப்பாளர்கள் தான். அந்த வகையில் கன்னடரான தினேஷ் குண்டு ராவ் தான் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கும் இடங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கப்போகிறவர். இதே போன்ற ஒரு நிலை தான் பாஜகவிலும் உள்ளது.
இதுநாள் வரை தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக ஆந்திராவை சேர்ந்த முரளிதர் ராவ் இருந்தார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த சிடி ரவி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு சிடி ரவி முன்னிலையில் தான் டெல்லியில் பாஜகவில் இணைந்தார். சி டி ரவி கர்நாடக மாநில கேபினட் அமைச்சர். அம்மாநிலத்தில் மிக முக்கியமான பாஜக தலைவர். இவர் தற்போது தமிழக பாஜக நிலவரங்களை கவனிக்க நட்டாவால் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரசை போலவே தமிழகத்தில் பாஜக எந்த கூட்டணியில் இருக்க வேண்டும், எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை இவர் தான் தீர்மானிப்பார்.
சிடி ரவி கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் பாஜக மேலிடம் அக்கட்சிக்கான தமிழக கூட்டணியை உறுதி செய்யும். அந்த வகையில் பாஜக இடம்பெறப்போகும் கூட்டணியை தமிழகத்தில் தீர்மானிக்கப்போவதும் ஒரு கன்னடர் தான். அதாவது காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டிய கூட்டணியை உறுதி செய்யப்போவது தினேஷ் குண்டுராவ் எனும் கன்னடர். இதே போல பாஜக இருக்கப்போகும் கூட்டணியை இறுதி செய்யப்போவர் சிடி ரவி எனும் கன்னடர். தமிழகத்தில் பொறுத்தவரை இந்த இரண்டு கட்சிகள் எந்த கூட்டணியில் இடம்பெற உள்ளன என்பது தான் அரசியல் களத்தை தீர்மானிக்கும். எனவே இந்த இரண்டு கன்னடர்கள் எடுக்கப்போகும் முடிவு தான் 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை தமிழக அரசியல் களத்தை தீர்மானிக்கும்.