Assembly before the election former finance minister of the interim budget presented ops

தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு துண்டுவிழ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின் இப்போது வரை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

2016-17ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் வரி இல்லாத பட்ஜெட்டாக அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.

தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடி என மதிப்பிடப்பட்டது. இதில் ஒட்டுமொத்த செலவு ரூ. ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடி என தெரிவிக்கப்பட்டு, வருவாய் பற்றாக்குறை ரூ.9 ஆயிரத்து 154.78 கோடி என அறிவிக்கப்பட்டது. 

கடந்த 2015-16ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறை ரூ.32 ஆயிரத்து 359.59 கோடி என மதிப்பிடப்பட்டு, பின் அது ரூ.36 ஆயிரத்து 740.11 கோடி என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.92 சதவீதமாகக் குறைந்தது என 14-வது நிதி ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டது. 



ேமலும், மாநிலத்தின் வரி வருவாய் கடந்த 2015-16ம் நிதியாண்டில் அரசு எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைந்து ரூ.72 ஆயிரத்து 326 கோடியாகச் சரிந்தது என தமிழக அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் மாநில அரசின் முக்கிய வருவாய் இனங்களில் டாஸ்மாக் வருமானம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒட்டுமொத்தமாக உள்ள 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து வருகிறது.

ஆனால், தேர்தல் வாக்குறுதியின்படி டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு இதுவரை ஆயிரம் கடைகள் வரை மூடப்பட்டுவிட்டன. இதன் மூலம் ஏறக்குறைய ரூ. 7 ஆயிரம் கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா இறந்தபின், மணல் குவாரிகளில் இருந்து கிடைக்கும் வருமானமும் முறையாக அரசுக்கு வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மணல் குவாரியின் மூலம் வரும் வருமானமும் படுத்துவிட்டது. 

இதற்கிடையே தமிழகத்தை தாக்கிய வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் பல இடங்களில் விழுந்ததால், மின்சார கம்பங்கள் சாய்ந்ததாலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தாதலும் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது.

இந்த பாதிப்புகளில் இருந்து தமிழக அரசு விரைவாக மீண்டு வந்தபோதிலும், இதற்காக ரூ. 7 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது. வர்தாபுயலுக்கான நிவாரணத் தொகை இதுவரை மத்திய அரசிடம் இருந்து வந்து சேரவில்லை. 

இந்நிலையில், தமிழகத்தில் தொழில்வளர்ச்சி பின்னடைவு, வறட்சி நிலை, ஜி.எஸ்.டி. வரி ஜூலைமாதம் அமலுக்கு வருவது போன்றவற்றால் மாநிலத்தின் வரிவருவாய் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. 

குறிப்பாக ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதால், மாநிலத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பீடுகள் மத்திய அரசிடம் இருந்து எப்போது கிடைக்கும் என்ற காலக்கெடுவும் தெரியவில்லை.



வர்தா புயல் பாதிப்பு, டாஸ் கடைகள் மூடல், மணல் குவாரிகள் வருவாய் பாதிப்பு ஆகியவற்றால் மட்டுமே அரசுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி வருவாய் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பசுமை வீடுகள், இலவச மிக்சி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்டவை வழங்குதல் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான செலவும் தவிர்க்க முடியாது.

 கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டதற்கான நிதி, வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான இழப்பீடு, வறட்சி நிவாரண நிதி ஆகியவையும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. 

இதனால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியுடன் இருப்பதால், அது குறித்து ஆலோசிக்கவும், பட்ஜெட் குறித்து முடிவு செய்யவும் முதல்வர்எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

ஒட்டுமொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை தமிழக அரசு அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.