தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு விரைவில் 2000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பாட புத்தகம் எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து முதல்வர் சமீபத்தில் ஒரு கோப்பில் கையெழுத் திட்டுள்ளார். அதன்படி, எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை கண்டறிந்து  அந்த இடங்களில், 7,500 சம்பளத்தில் 2000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதற்கான பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் செய்து வருகின்றனர். 

இனி எதிர்காலத்தில் பள்ளிகளில் காலிப் பணியிடம் என்பதே இருக்காது என்றார். இதேபோல் மகப்பேறு காலத்தில் 9 மாதம் விடுமுறையில் செல்லும் ஆசிரியைகளுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை கட்டமைக்க தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் நிதி கிடைத்துள்ளது.

தனியார் பங்களிப்புடன் பல அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி, ஸ்மார்ட் கிளாஸ் அமைத்தல் போன்ற பணி நடந்து வருகிறது. மேலும் பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பொங்கலுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை செய்யும் வகையில் வெள்ளையடித்து தரப்படும். இதற்காக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.