2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது. 

கடந்த 2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என  மோடி நள்ளிரவில் அறிவித்தார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக  ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு  காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.  ஏடிஎம் மையங்களில் பணத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  மத்திய அரசின் மீது அது மிகப்பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

 

பின்னர் ஒரு மாதம் கழித்து ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு  நாடு முழுமைக்கும் விநியோகம் செய்தது. மீண்டும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகினர். சில்லரை தட்டுப்பாடு நீங்க  2000 ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக 500, ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனாலும் அதே நிலையே நீடித்தது. அத்துடன் அதிக அளவு  2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் எளிதில் பணத்தை பதுக்கி வைப்பதற்கு உதவுமே தவிற கருப்பு பணத்தை குறைக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். இந் நிலையில் சமீபகாலமாக மீண்டும்  2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

 

அதில்  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்,  2016- 2017 மற்றும் 2017- 2018  நிதியாண்டுகளில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது எனவும், அதே  2019 - 2020 ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும், ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.  பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளதுடன். ரூபாய் நோட்டுச்செல்லாது என அறிவிப்பதைவிட அதன் விநியோகத்தை படிப்படியாக குறைப்பது சாலச்சிறந்தது என கருத்து கூறிவருகின்றனர்.