கடலூர் மாவட்டத்தில் சைமா சாயப்பட்டறை திட்டப்பணிகளை கைவிட வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார் மேலும் சுற்றுச்சூழல் தாக்கீட்டு வரைவு அறிக்கை 2020 தான் வந்திருக்கிறதே தவிர, அது சட்டம் ஆகவில்லை. விவாதிக்கப்பட கூட இல்லை. ஆக நாட்டை அரசமைப்புச் சட்டம் ஆளவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (South Indian Mills Association)நிறுவனம் ஜவுளி பூங்கா (textile processing Ltd) என்ற பெயரில் சாயப்பட்டறை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சாயப்பட்டறை திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 கோடியே 65 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். அந்த நீருக்காக 11 ராட்சஸ ஆழ்துளை கிணறுகள் தோண்ட திட்டமிடப்பட்டு, ஐந்து கிணறுகள்  தோண்டப்பட்டு விட்டது. இப்படியாக அவ்வளவு நீர் உறிஞ்சப் பட்டால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும்.அதோடு பெருமாள் ஏரி முற்றிலும் வறண்டு விடும், 

பெரியப்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம்,  வண்டியாம்பள்ளம்,  பூவாணிகுப்பம், சிறுபாலையூர்,  திர்த்தனகிரி, ஆதி நாராயணபுரம், ஆலப்பாக்கம், பூண்டியாங்குப்பம், கொத்தவாச்சேரி,   முள்ளிப்பள்ளம்,   சிலம்பிமங்கலம், திருச்சோபுரம், தியாகவல்லி, வேளாங்கிப்பட்டு, வில்லியநல்லூர், மணிக்கொள்ளை, கொத்தட்டை, பெரியகுமட்டி, சின்ன குமட்டி, பரங்கிப்பேட்டை, அகரம், புதுப்பேட்டை ஆகிய 25 பஞ்சாயத்துக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும்.

 திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள சாயக் கழிவுகளை கொண்டு வந்து சேமித்து சுத்திகரிக்காமல் இங்குள்ள நீரை எடுத்து அதோடு கலந்து அப்படியே கடலில் கலந்துவிடும் திட்டம்தான் இது என்பது மூடி மறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதால் மீன் வளங்கள் அழிந்து, 15க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். இத்திட்ட பகுதியிலிருந்து. சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில், கடல் உள்ளது. 

எனவே கடற்கரை ஒழுங்காற்று சட்ட விதிகளின்படி இப்பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, ஆலை கழிவுகள் கடலில் கலப்பது குற்றமாகும், அனுமதி இல்லாமல் தோண்டப்பட்டுள்ள, 56 ஆழ்துளை கிணறுகளை பொதுமக்கள் முன்னிலையில் கான்கிரீட் கலவை கொண்டு மூட வேண்டும். சிப்காட் விதிகள் பிரிவு 3-ன் கீழ் சிவப்புப் பட்டியலில் உள்ள இந்த ஆலை அமைப்பதற்கு மக்களின் கருத்து கேட்கும் உள்ளாட்சி நிர்வாக இசைவும் பெறப்படவில்லை. இது சட்ட மீறலாகும். சாயப்பட்டறைகளால் புற்றுநோய், தோல் நோய்கள், மலட்டுத் தன்மை, சிறுநீரகப் பாதிப்பு,  நுரையீரல் பாதிப்பு போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும். இத்திட்டத்தால், பெருமாள் ஏரி பாசனத்துக்கு உட்பட்ட சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள்,  பிச்சாவரம் அலையாத்தி காடுகள் அழிவை நோக்கி தள்ளப்படும். சைமா சாயப்பட்டறை திட்டம் அது அமையவிருக்கும் பகுதியை மட்டுமல்ல, கடலூர் மாவட்டம் முழுவதும், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியது. எனவே திட்டத்தை தடைசெய்யக்கோரி, 50க்கும் மேற்பட்ட போராட்டங்களை மக்கள் நடத்தியுள்ளனர். 

மேற்கண்ட விஷயங்கள் அடிப்படையில் இந்த 25 பஞ்சாயத்துகளும் 2020 ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சைமா சாயப்பட்டறை திட்டத்தை முற்றிலுமாக கைவிட கோரி தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளன. அதேபோல் சுற்றுச்சூழல் தாக்கூட்டு வரைவு அறிக்கை 2020 தான் வந்து இருக்கிறதே தவிர, அது சட்டம் ஆகவில்லை. விவாதிக்கப்பட கூட இல்லை, கடலூர் மாவட்டத்தில் சைமா சாயப்பட்டறை திட்டங்கள் நடைபெறுகிறது, ஆக நாட்டை அரசமைப்புச் சட்டம் ஆளவில்லை, கனமான சிலரே ஆள்வது தெரிகிறது. சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் வாழ்வாதார திட்டங்களை மக்களோடு நின்று கைவிட கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.