20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஆர்.கே.நகரில் வென்றதாக ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து டி.டி.வி.மீது கறையைப் பூசி வருகின்றனர். எப்போதோ கிளம்பிய இந்த குற்றச்சாட்டு இப்போதும் உயிருடன் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த டோக்கன் ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

 

தர்மபுரியில் இன்று நடந்த அமமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ’’20 ரூபாய் டோக்கன் தினகரனாம். அதிமுகவும், திமுகவும் 6 ஆயிரம் ரூபாயை வீடுவீடாகப் போய் கொடுத்தார்கள். அதை விட்டுட்டு 20 ரூபாய் டோக்கன் கொடுத்தால் யாராவது அதை நம்பி ஓட்டுப் போடுவார்களா? மக்கள் என்ன முட்டாளா? அதிலும் ஆர்.கே.நகர் மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆளுங்கட்சி, எட்டுக்கட்சியுடன் கூட்டணி அமைத்து நின்ற பிரதான எதிர்கட்சி என்பதை எல்லாம் தாண்டி ஒரு சுயேட்சையாக அம்மாவுடைய தொகுதியில், அதுவும் சென்னையில் தமிழக மக்களின் சார்பாக ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2500 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தார்கள்.

 நான் என்ன புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரா? இல்லை புரட்சி தலைவி அம்மாவா? இல்லை நான் பெரிய சூப்பர் ஸ்டாரா? எதுவும் இல்லை. ஆனால், மக்களுக்கு நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று தெரியும். இந்த ஆட்சி யாரால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? இங்கிருக்கிற அன்பழகன் அன்று யாரிடம் கைகட்டி நின்றார். இப்போது யாரை வந்து எதிர்க்கிறார்கள். எதிர்த்து பதவி இழந்த உடனே ஓடிப்போய் பாஜகவிடம் சரணடைந்து அம்மாவுடைய சமாதியில் தியானம் செய்த பன்னீர்செல்வம் அரசியலுக்காக அம்மாவுடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். அம்மா இறந்து இரண்டு மாதம் முதல்வராக இருந்தவரைக்கும் அவருக்கு சந்தேகம் இல்லை. அதனால் தான் தமிழக மக்கள் குறிப்பாக தென்மாவட்ட மக்கள் பன்னீர்செல்வத்தை துரோகத்தின் அடையாளமாக்கி விட்டார்கள். மற்றொரு பக்கம் மேற்கு மண்டல மக்கள் காசில் ஒரு பக்கம் பன்னீர்செல்வத்தையும், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியையும் வைத்து கிண்டலடித்து வருகிறார்கள். அம்மா இறந்த பிறகு பழனிசாமி என்ன சுயம்புவாக வந்து விட்டாரா? 

சுயம்பாக வந்திருந்தால் ஆர்.கே.நகரில் வீடு வீடாகப்போய் போலீஸ் துணையுடன் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்களே.. அப்படி இருந்தும் ஏன் ஜெயிக்க முடியவில்லை?  டோக்கன் கொடுத்தேன் டோக்கன் கொடுத்தேன் எனச் சொல்கிறீர்களே... அப்போது நான் பணம் கொடுத்ததாக எம்.எல்.ரவி என்பவரை வைத்து என் மீது வழக்குப்போட்டார்கள். அதை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது மதுசூதனன், மருது கணேஷ் எல்லாம் நீதிமன்றத்திற்கு வராமல் அமைதியாக இருந்து விட்டு இப்போது டோக்கன் கொடுத்தேன் எனச் சொல்வது எந்த வகையில் உண்மையாகும்’’ என அவர் கூறினார்.