ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் நேற்று நள்ளிரவு முதல் சிபிஐ 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதன்படி, இந்திராணி முகர்ஜியையும், அவரின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியையும் எப்படி உங்களுக்கு தெரியும்? யார் மூலம் அறிமுகம் அறிமுகமானார்கள்?

இந்திராணி முகர்ஜியையும், பீட்டர் முகர்ஜியையும் அறிமுகம் செய்யும் போது ஏதேனும் பத்திரிகையாளர்கள் உடன் வந்தார்களா?

பணப்பரிமாற்றத்தில் பத்திரிகையாளர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா?

இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில், “சிதம்பரத்தை சந்தித்தபோது அவர், கார்த்தி சிதம்பரம் உதவுவார். அவர் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துவிடுவார். அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்” என்று கூறியுள்ளாரே? 

செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் ஆகிய இரு நிறுவனங்கள் குறித்த விவரங்களையும் இந்திரா முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் குறித்து என்ன தகவல்?

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தந்த விஷயத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது?

கார்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனத்துக்கு பணம் ஏதும் பரிமாற்றப்பட்டதா?

சிபிஐ ஆஜராக அழைக்கும்போது ஏன் ஒளிந்து கொள்ள முயற்சித்தீர்கள்?

கடந்த 24 மணிநேரமாக எங்கு தங்கி இருந்தீர்கள்? எந்தவிதமான செல்போன் எண்ணை பயன்படுத்தினீர்கள்? வேறு ஏதாவது புதிய செல்போன் எண்ணை பயன்படுத்த முயற்சித்தீர்களா? உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உடனடியாக யாரைச் சந்தித்தீர்கள்?

வீட்டில் நோட்டீஸ் ஒட்டியபின், ஏன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை?

உங்கள் பெயரிலும், மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரிலும் எத்தனை போலி நிறுவனங்கள் இருக்கின்றன?

இங்கிலாந்து நிர்வகிக்கும் தீவுகளில் இருந்து கார்த்தி சிதம்பரம் ஏன் பணம் பெற்றார்?

இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் சொத்துக்களை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

ஸ்பெயினில் பார்சிலோனா டென்னிஸ் கிளப்பை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?

இதுபோன்று முதல் சுற்றில் 20 கேள்விகள் கேட்டு பதில் பெற்ற நிலையில், 2-ஆம் சுற்று விசாரணையில் கேள்விகள் இன்று காலை 8 மணியில்இருந்து கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் அந்த கேள்விகள் அனைத்துக்கும் ப.சிதம்பரம், மழுப்பலாகவும், தெரியாது என்றும், விவரம் தெரியவில்லை என்றே பதில் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.