தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி கே. அலாவுதீன், இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்களிடம் வழங்கினார்.

நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில், அமைதி வழியில் அன்பின்  அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டு தோறும் கஸ்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் திருவிழாவாக உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 20 கிலோ சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையை  நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும்எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்)திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில்ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 25.11.2012 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, 2013-ஆம் ஆண்டு முதல்,நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்கள். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முனைவர் பெ. துரைராசு, இ.வ.ப., நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி - ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி திரு.எஸ்.எஃப். அக்பர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.