சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு இணைந்து எப்படி தேர்தல் பணியை முடுக்கி விடுவதற்கு ஈடுபட வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அந்த வகையில் இந்த கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. 

திமுகவைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் ஜனநாயகத்தின் நெறிமுறைகள் போற்றிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தவரையில் அதிமுகவுக்கு சாதகமா? அல்லது இன்னொரு அணிக்கு சாதகமா? என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. அதுபற்றி திமுக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலையிலே இருந்து கொண்டுள்ளது. 

அந்த இரண்டு தொகுதிகள் மட்டுமல்லாது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 18 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை இருந்து வருகிறது. இந்த இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளாக தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்துவதற்கு உடனடியாக முன்வர வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். காரணம், அந்த தேர்தலைப் பொறுத்தவரையில், திமுகவுக்கு பெருவாரியான ஆதரவு அளிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கூறுகிறேன் என்றார்.