எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனி. மீனவர். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகள் ரித்திகா. (2). கடந்த சனிக்கிழமை மாலை ரித்திகா, வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கலைவாணி வெளியே சென்று பார்த்தபோது, குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் வீடுகளில்விசாரித்தார். ஆனால் ரித்திகா பற்றி எந்த தகவலும் இல்லை. பின்னர்,, அந்த பகுதி முழுவதும் தேடினார். ஆனால் குழந்தையை காணவில்லை.
இதுகுறித்து எண்ணூர் போலீசில், பழனி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான குழந்தை ரித்திகாவை தேடி வந்தனர்.
நேற்று காலை மாநகராட்சி குப்பை அள்ளும் லாரி, எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சென்றது. கடைசியாக திருவொற்றியூ கரிமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டியது. அப்போது, குப்பைகளுடன் குழந்தை சடலம் வந்து விழுந்தது.
இதை பார்த்ததும், அங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு குப்பை கிடங்கில் இருந்த சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், குழந்தை மாயமானதாக புகார் வந்ததா என அனைத்து காவல் நிலையங்களிலும் விசாரித்தனர்.
அப்போது, எண்ணூர் காவல் நிலையத்தில், ரித்திகா குறித்த புகார் இருப்பது தெரிந்தது. இதைதொடர்ந்து பழனி, கலைவாணி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு சடலத்தை பார்த்து, அவர்கள் கதறி அழுதனர். இதனால், சடலமாக மீட்கப்பட்டது, ரித்திகா என உறுதியானது.
இதைதொடர்ந்து போலீசார், தீவிரமாக விசாரித்தனர். இதற்கிடையில், எண்ணூர் பகுதி மக்கள், சிறுமி சாவு குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் நிலவியது.
இந்நிலையில் போலீசாரின் விசாரணையில், பழனி வீட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.‘
இதையடுத்து ரேவதியை காவல் நிலையம் கொண்டு சென்று, கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குழந்தை ரித்திகாவை, கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியதை ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ரேவதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: குழந்தை ரித்திகாவின் காலில் சுமார் 50 கிராம் வெள்ளி கொலுசு அணிந்திரிந்தாள். கழுத்தில ஒரு சவரன் நகை இருந்தது. வெளியில்விளையாடி கொண்டிருந்த ரித்திகாவை நைசாக பேசி என் வீட்டுக்கு அழைத்தேன்.
அவள் வந்ததும், நகைகளை கழற்றினேன். ஆனால், அவள் அலறி கூச்சலிட்டாள். இதனால், பயந்துபோன நான், ரித்திகாவின் வாயை பொத்தினேன். இதில், மூச்சு திணறி இறந்தாள். இதனால், ஒரு துணியில் சுற்றி வீட்டின் ஓரத்தில், சடலத்தை மறைத்து வைத்தேன்.
நள்ளிரவு ஆனதும், யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்றுவிட்டேன். காலையில் குப்பையை லாரியில் கொண்டு சென்றபோது, சடலமும் அதில் போய்விட்டது. இதுயாருக்கும் தெரியாது என இருந்தேன். ஆனால், போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
