தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை கட்டவேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை கட்டவேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இரண்டு தலைமைச்செயலகங்களை கட்ட வேண்டும் என்றும் அதில் ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் இயங்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் போதிய இடவசதி இல்லாததாலும், அது வாடகை கட்டிடம் என்பதாலும் தமிழகத்துக்கு என தனி தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை பெரும் பொருட்செலவில் அமைத்தார். ஆனால் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த கட்டிடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றினார். இதனால் மீண்டும் தலைமைச் செயலகம் ஜார்ஜ் கோட்டையிலேயே இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய ராணுவம் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத இடமாகவே தலைமைச் செயலகம் உள்ளது.

இந்த கட்டிடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும் கூட அது இந்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் வாடகை என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு தொடர்ந்து செலவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய தலைமைச் செயலகத்தை ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைக்கப் போகிறதா அல்லது பன்னோக்கு அரசு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்தான் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தமிழக முதல்வருக்கு புதிய தலைமைச் செயலகம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையும் இயங்கி வருகிறது.

தற்போது இந்த புனித ஜார்ஜ் கோட்டையானது மிகவும் பழைய கட்டிடமாகவும் மற்றும் இட வசதி இல்லாமலும் நவீன வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகிறது எனவே புதிதாகவும் இட வசதியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும். கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை தமிழகத்தின் மையமான திருச்சியில் அமைத்திட வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்திட வேண்டும். மேலும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையில் மட்டும் நடத்திடாமல் மற்ற ஊர்களிலும் நடத்த வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
