சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்திய போலீசார் அடுத்தகட்டமாக அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் அளிக்கப்பட்ட வழக்கில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாகக் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட தினகரனை பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் 1 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல முக்கியத் தகவல்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

முதற்கட்ட விசாரணை முடிந்ததை அடுத்து அடையாறு கற்கம் அவென்யூவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு தினகரனை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி போலீஸ் அதிகாரி சஞ்சய் ஷெராவத் தலைமையிலான விசாரணைக் குழுவினர் தினகரனின் வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியுள்ளனர். 

அப்போது பல முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைத்ததாக தகவல்  வெளியாகி உள்ளது. 

டிடிவி தினகரனின் வீட்டை அடுத்து தினகரன் அதிகமாகச் செல்லும் போயஸ் கார்டனுக்கும் அவர் அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும், அங்கு தினகரன் பயன்படுத்தும் ஒரு அறையில் சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.