சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  "ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வா் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகியோர் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. அண்மையில் முதல்வா் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வா், கட்சியின் மாநிலத் தலைவா் ஆகிய பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவு அமைச்சா்கள் இருவரது பதவியும் பறிக்கப்பட்டது. 

 சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தவிட்டார்.இதை எதிர்த்து சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சம்மந்தமாக  வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு அவா்களுக்கு மாநில பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தரப்பிலும், சச்சி்ன் பைலட் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு எதிராக சபாநாயகர் வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.