18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முதல்வர், சபாநாயகர், அரசு கொறடா ஆகியோர் தரப்பு வாதம் நிறைவு பெற்றதையடுத்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். முன்னதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.

நேற்றைய விசாரணையின் போது முதல்வர் தரப்பு வாதிடப்பட்டது. அதில் முதல்வரை மாற்றக்கோரி 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது எனவும் கூறப்பட்டது. இன்றைய விசாரணையின் போது கொறடா தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். அதில் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியானது தான். மேலும் சபாநாயகரின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். 

அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை எம்.எல்.ஏ ஜக்கையன் மாற்றி கொண்டார். ஜக்கையனை தவிர மற்ற 18 பேரும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றாததால் தகுதி நீக்க பரிந்துரைத்தேன் என்று அரசு கொறடா கூறினார். அரசு கொறடாவின் வாதம் இன்று நிறைவடைந்ததையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.