18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தான் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு அளித்த எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிராக 18 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். 

சபாநாயகர் நடவடிக்கை சரியானது என இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். சபாநாயகர் நடவடிக்கை செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது- நீதிபதி சத்யநாராயணன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். அதாவது 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பை ஏற்பதா இல்லை சுந்தர் தீர்ப்பை ஏற்பதா என்று தான் நீதிபதி சத்யநாராயணன் விசாரித்தார். 3 விசாரணை முடிந்து ஆகஸ்ட் 31ந் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

செப்டம்பர் மாத மத்தியில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை. அதன் பிறகு செப்டம்பர் இறுதியில் நீதிபதி சத்யநாராயன் தீர்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூரில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள நீதிபதி சத்யநாராயன் சென்றுவிட்டார். இந்த கருத்தரங்கு முடிந்து வரும் 8ந் தேதி தான் நீதிபதி சத்யநாராயணன் சென்னை திரும்புகிறார்.  

அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம் 10ந் தேதி திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படாது என்றும் தொடர்ந்து  சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வருவதால் அந்த விடுமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு தான் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சத்யநாராயணன் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 26 அல்லது 29ந் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.