தேர்தல் ஆணையம், கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்காமல் அவசர கதியில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார் என மோகன் பராசரன் இன்று வாதிட்டார். 

முன்னதாக தகுதி நீக்க வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் கடந்த மாதம் முதல் விசாரித்து வருகின்றார். கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனுதரார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன், வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆம் தேதி தன்னுடைய இறுதி வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடுத்து வைத்தார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை எடுத்துவைத்தார். அரசு தலைமை கொறடா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி இறுதி வாதத்தை முன்வைத்தார். இன்று மீண்டும் 18 எம்.எல்.ஏ.க்களை சார்பாக மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதத்தை முன்வைத்தார். அதிமுக யாருடையது என ஆணையம் முடிவுசெய்வதற்கு முன்னரே தகுதிநீக்கம் செய்தது தவறு என்றார். முதல்வர் மீதான குற்றச்சாட்டுகளை கூறி மாற்ற வேண்டும் என்றுதான் சொன்னோம். ஆட்சி மாற்றம் எங்கள் நோக்கம் இல்லை என்பதை ஆளுநரிடம் தெளிவாக கூறியுள்ளோம் எம்.எல்.ஏ. தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சபாநாயகரை விட அதிக அதிகாரத்தை உடைய தலைமை தேர்தல் ஆணையர் அதிமுகவை முடக்கி பிறப்பித்த உத்தரவு நிலுவையில் உள்ள போது, தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். கட்சியும், சின்னமும் முடங்கியிருந்த நிலையில் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது தவறு என்று கூறினார். தேர்தல் ஆணையத்தில் நிலையில் உள்ள விவகாரங்களில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது என்றார். தேர்தல் ஆணையர் உத்தரவின் பேரிலேயே கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டிருந்தது என அவரது வாதத்தை நிறைவு செய்தார். நாளை 18 பேர் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதாட உள்ளார்.