காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து வரும் ஏப்ரல் 24ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணைய செயலாளருக்கு தமிழக முதன்மை செலயாளர் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கடிதம் எழுதி உள்ளார்.

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மேல் முறையீடு செய்ய ஏப்ரல் 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகளை பொறுத்து தேர்தல் நடத்துவது பற்றி முடிவெடுகப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடாளுமன்றத்தேர்தலோடு 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்பது கிட்டத்தட்ட உறுதி படுத்தப்பட்டுள்ளது.