விசிக கொடியேற்றிய 15 பேர் கைது.. போலீஸ் அதிகாரிகள், எம்எல்ஏவிடம் பேசியும் பலனில்லை.. உடைந்துபோன திருமாவளவன்.
இப்போதுகூட சேலம் மாவட்டத்தில் விசிக கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளையும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசியும் என்னால் முடியவில்லை.
சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றிய 15 விடுதலை சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களைக் காப்பாற்ற அனைத்து காவல்துறை அதிகாரிகளையும், ஆளும் சட்டமன்ற உறுப்பினர்க்கும் தொடர்பு கொண்டு பேசியும் அவர்களைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிம் தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக மாறியும், பொது இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவது பெரும் சவாலாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கவிஞர் இரா.அசோக் குமார் என்பவரின் ஆயுத விரல் என்னும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட சமூக செயற்பாட்டாளர் ஓவியா பெற்றுக்கொண்டார். அதில் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் தனது அரசியல் பயணத்தில் சந்தித்த அவமானங்கள், சாதனைகள், சோதனைகள் வெற்றிகள் என அனைத்தையும் இந்த கவிதை புத்தகம் பதிவு செய்திருக்கிறது. இந்த காலம் திருமா காலம், இது மனுவின் இடுப்பை உடைக்கும் காலம் என இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகளின் கொள்கை சாசனம் என்று கூட இந்த புத்தகத்தை கூறலாம், நான் தொடர்ந்து ஐந்து மணி நேரங்களுக்கு மேல் உறங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரவு 2 மணிவரை கட்சிப் பணிகளில் சுற்றுச்சூழலை வேண்டியிருக்கிறது. இதையும் இந்த புத்தகம் பதிவு செய்துள்ளது. நம்மீது கல்லெறிந்தவர்கள் ஒரு காலத்தில் பூ தூவுவார்கள் என்று நான் கூறினேன். அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, விடுதலை சிறுத்தைகள் துவக்க காலத்தில் போதிய பொருளாதார கட்டமைப்புகள் இல்லை, ஊடக ஒத்துழைப்பு இல்லை, தன்னோடு கட்சி தொடங்கியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். 30 ஆண்டுகள் மக்களுக்காக போராடி வலுவான அரசியல் சக்தியாக உருமாற்றம் அடைந்திருக்கிறோம். ஆனாலும்கூட இன்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை பொது இடங்களில் ஏற்ற முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள் என்ற ட்சியின் பெயரையே மாற்றச் சொல்லி காவல்துறையினர் என்னை தனி அறைகளில் வைத்து மிரட்டி இருக்கிறார்கள் அப்போதும் நான் அதில் சமரசம் செய்து கொள்ளவில்லை.
இப்போதுகூட சேலம் மாவட்டத்தில் விசிக கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளையும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசியும் என்னால் முடியவில்லை. பொது இடங்களில் கொடியேற்ற சென்றால் மற்ற காட்சிகளில் கொடியை கூட இறக்கி விடுகிறோம், ஆனால் பொது இடத்தில் விசிக கொடியை ஏற்ற வேண்டாம் என்று காவல் துறை சொல்வதை கேட்டு சாதிவெறியர்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள் விசிக கொடி ஏற்றுவதில் உள்ள சிக்கல்களையே ஒரு புத்தகமாக வெளியிடலாம் என அவர் வேதனை தெரிவித்தார்.