கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 6 மணி முதல் 31 ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் கீழ்கண்ட முக்கிய நிகழ்வுகளை தவிர மற்ற அனைத்து பணிகளையும் ஒத்திவைக்க அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

* அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. 

* அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, மருந்தகம் , இறைச்சி, மீன் கடைகள் தவிர மற்ற கடைகளும், வணிக வளாகங்களும், அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* முக்கிய அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை, பொது சுகாதார துறை தவிர வேறு எந்த அரசு பணிகளும் நடைபெறாது.

* தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்

* வீடுககள் தவிர்த்து விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன் கருதி உணவகங்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது. இவை தவிர அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.