தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா குரூப் கம்பெனி தொடர்ந்த வழக்கில் சென்னை  உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆணையம் 19 கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது.அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 மூடப்பட்ட ஆலையை திறக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. ஆலையை திறக்கக் கூடாது என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.பல நாட்களாக இவ்வழக்கு விசாரணை நடந்தது. இரு தரப்பிலும், மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர். வழக்கின் தீர்ப்பை, 2020 ஜன., 8ல், தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.