அமைச்சர் மஸ்தானின் பதவி தப்புமா? ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா!
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மருமகன் ரிஸ்வான் தலையீடு நகராட்சியில் அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டிவனம் நகராட்சியில் ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது மருமகன் என்று கூறப்படுகிறது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை உள் அடக்கியது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு புகார் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, மாற்றுக்கட்சியிலிருந்து புதியதாக திமுகவுக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது குடும்பத்தை சார்ந்தவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை வழங்கியது. குறிப்பாக பிரபல சாராய வியாபாரியுமான மரூர் ராஜாவுடன் அமைச்சர் மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து, நகரமன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு 13 கவுன்சிலர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெற்ற போது 7வது வார்டு திமுக கவுன்சிலர் புனிதா வாயில் கருப்பு துணியை கட்டியப்படி வந்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், நகரமன்ற கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு அவமானமாக உள்ளது. எங்களுடைய தளபதி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நகரமன்றம் செயல்படுவதால், நாங்கள் எங்களுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப் போகிறோம் என்று கூறி 13 கவுன்சிலர்கள் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை உயர்த்திக் காட்டிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த கவுன்சிலர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் நாங்கள் பதவிக்கு வந்து 18 மாதம் ஆகிறது. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மஸ்தானின் மருமகனை கேளுங்கள் என்று கூறுகின்றனர். குறிப்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மருமகன் ரிஸ்வான் தலையீடு நகராட்சியில் அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, செஞ்சி பேரூராட்சியில் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானைக் களமிறக்கி வெற்றிபெறச் செய்து செஞ்சி பேரூராட்சி தலைவராக்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தானே இருந்து வருகிறார்.
இதுமட்டுமின்றி, அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அமைச்சரின் குடும்பத்தினரே கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக நிர்வாகிகள் தனது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினர் அடுத்தடுத்து புகார் வரும் நிலையில் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.