127 assets including snowmoney are mortgaged in the bank

பனிமனை உட்பட 127 சொத்துக்கள் வங்கியில் அடமானமாக உள்ளது என போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டேவிடர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை காரணமாக காட்டி பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. 

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த ஆய்வறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.

முதல்வருடான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 27 பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். போக்குவரத்து சேவையை சேவையாக கருதி, அதன்மூலம் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

கலால் வரி, மதிப்பு கூட்டுவரி ஆகியவற்றின் காரணமாகவே டீசல் விலை உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதந்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்த வேண்டும், மத்திய தொகுப்பு நிதியத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களை சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட 27 பரிந்துரைகளை அளித்துள்ளோம்.

அதன்படி செயல்பட்டால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே வராது. அதை செயல்படுத்துகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழக அரசு நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்தது. 

இந்நிலையில் பனிமனை உட்பட 127 சொத்துக்கள் வங்கியில் அடமானமாக உள்ளது என போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டேவிடர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதிக்குள் 30 சொத்துக்கள் மீட்கப்படும், மேலும் போக்குவரத்து கழகத்திற்காக 2000 பேருந்துகள் விரைவில் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.