ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சின்னம்மாவின் முயற்சியால்தான் மீண்டும் இங்கே அரசாங்கம் அமைக்கப்பட்டது என்றும் அவர் அன்னைக்கு என்னை கைகாட்டி இருந்தால், நான் முதலமைச்சராகி இருப்பேன் என்றும் நாங்கள் பதவிக்காக துரோகமிழைப்பவர்கள் அல்ல என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், பெரிய குளம் சென்றுள்ள டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 

நான் தஞ்சையில் பிறந்திருந்தாலும், தேனியில்தான் ஜெயலலிதா மூலம் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டேன். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுப்பதற்காக நான் யாரையும் தரம் தாழ்ந்து பேச விரும்பவில்லை.

புதுச்சேரியில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் எந்த பயன்தின் காரணமாகவோ தங்கவில்லை. 122 எம்எல்ஏக்களும் எங்களது ஆதரவாளர்கள்தான். 

தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் அது நன்றாக தெரியும். வாக்களித்த மக்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

18 எம்எல்ஏக்கள் அளித்த கடிதத்துக்கு ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். 122 எம்எல்ஏக்களின் ஆதரவும் எங்களுக்கு உண்டு. ஒரு சிலர் தங்களின் சுயநலத்துக்காக பதவி ஆசைக்காக அவர்கள் இன்று செயல்பட்டு வருகின்றனர்.

அனைத்து முடிவுகளையும் எடுக்க பொது செயலாளர் எனக்கு அதிகாரம் அளித்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் துணிச்சலானவர். எது சரி என்று கூறுகிறாரோ அதில் உறுதியோடு இருப்பார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல நான் ஜோதிடரோ, அரசியல் வல்லுநரோ இல்லை.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சின்னம்மாவின் முயற்சியால்தான் மீண்டும் இங்கே அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவர் அன்னைக்கு என்னை கைகாட்டி இருந்தால், நான் முதலமைச்சராகி இருப்பேன். நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் அல்ல. பதவிக்காக துரோகமிழைப்பவர்கள் அல்ல. பல்வேறு தியாகங்களைச் சசிகலா செய்திருக்கிறார்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.