120 cases registered in RKNagar

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவை குறித்து இதுவரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறியுள்ளார். நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், வெளியூர்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக, டிடிவி தினகரன், உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த முறை, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. 

ஆர்.கே.நகரில் இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில், ஆளுங்கட்சியினர் ஒரே நாளில் அதாவது 6 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனைகளிலும், எம்ஜிஆர் சமாதியிலும் ஹோட்டல்களிலும் பணப்பட்டுவாடா செய்ததாக சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சியினர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மூன்று வழக்குகளும், தினகரன் ஆதரவாளர்கள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆர்.கே.நகரில் இதுவரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.30.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமிஷனர் விஸ்வநாதன், ஆர்.கே.நகரில் இதுவரை 120 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை 30.48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், 5 மணிக்குப் பிறகு வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றார். ஆர்.கே.நகர் ஓட்டு எண்ணிக்கை 14 மேசைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறினார்.