முதல்வர் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பதற்றம் தொற்றியுள்ளது. 

அரசு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, திமுக கொறடா சக்கரபாணி மற்றும் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி, அசோக்பூஷன், அப்துநசீர் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு தேதி விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

''இந்தத் தீர்ப்பு வரும்போது ஆட்சி கவிழ்ந்துவிடும். இதை நான் சொன்னால் ஏதோ கனவில் மிதப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை'' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய எம்எல்ஏ பதவிக்கும் துணை முதல்வர் பதவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே அவர் தலைமைச் செயலகத்தில் அதிகாலை யாகம் நடத்தியதாக கூறப்பட்டது.  தற்போது டெல்லிக்கு ரகசிய தூது அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் தற்போதுள்ள பாஜக எதிர்ப்பு அலை, இதற்கு உலை வைத்துவிடும் என்பதால்தான் மோடி மதுரை வரும்போது கூட கூட்டணிப் பேச்சு பற்றி மூச்சு கூட விடவில்லை என்கிறார்கள். அதனால், பாஜகவும் செத்தால் ரெண்டு பேரும் சேர்ந்தே சாவோம் என்ற ரீதியில், ஆட்சிக்கலைப்பை அஸ்திரமாகப் பயன்படுத்தி அதிமுகவை கட்டுப்படுத்த நினைக்கிறது.

 

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு பிப்ரவரி மாதத்தில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் எதிராக வந்தாலும் ஆட்சி உடனடியாக கவிழாது எனவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் பட்சத்தில் ஆட்சி கவிழும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.