கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக குமாராசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும்கட்சி மீது அதிருப்தி கொண்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். ஆனால், இந்த கடிதத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர் மீது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

  

அதில், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு சுந்திரம் உள்ளது என தீர்ப்பில் கூறப்பட்டது. 

இந்நிலையில், முதல்வருக்கு எதிராக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர். சபாநாயகர் தனபால் நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இவர்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

ஆகையால், கர்நாடக வழக்கில் சபாநாயகர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற தீர்ப்பு வழங்கியுள்ளதால், ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் அது எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது.