கொரோனா தாண்டவமாடுவதால் பொறியியல் உட்பட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் 100 சதவிகிதம் அப்படியே திருப்பி அளிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 'ஜெகனண்ணா வித்யா தீவெனா' என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, ‘’இந்த அளவுக்கு எந்தவொரு அரசும் கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்ததில்லை. இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு செயல்பட்ட காலத்தில் மிச்சமிருந்த தொகையை வழங்கவும் எங்கள் அரசு சார்பில் ரூ.1,880 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளோம்

தேவையுள்ள மற்றும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி சாத்தியம் ஆக வேண்டும். குழந்தைகளுக்குக் கொடுக்க முடிகிற ஆகச் சிறந்த செல்வம் கல்வியே. அதை நோக்கியே நாங்கள் பயணிக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்’’ என அவர் தெரிவித்தார். 

முன்னதாக 'ஜெகனண்ணா அம்மா வோடி' என்னும் திட்டத்தின் மூலம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஏழைத் தாய்மார்களுக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வோரு ஆண்டும் ரூ.15 ஆயிரத்தை அரசே வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு அறிமுகம் செய்தது.