நாங்கள் மட்டும் கடனில் இல்லை இதியாவும், தமிழகமும் கடனில் தான் இருக்கிறது என விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

வங்கிக்கடனை கட்ட முடியாததால் விஜயகாந்தின் வீடு உள்ளிட ரூ 100 கோடி சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ’’இந்த ஏல அறிவிப்பையும் நாங்கள் கடந்து தான் செல்லவேண்டும். கல்லூரி விரிவாக்கத்திற்காக அந்தக் கடன் வாங்கப்பட்டது. இப்போது கல்லூரி நல்ல நிலையில் இயங்கவில்லை. அதன் மூலம் வருமானமும் வருவதில்லை. பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே. 

கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட முடியாமல் க‌ஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். வருமானத்திற்கு இப்போது வழியில்லாமல் போய்விட்டது. கேப்டன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். வருமானம் வந்து கொண்டிருந்த கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டு விட்டது. மகன் இப்போதுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். 

அனைத்து தொழில்களும், கல்லூரிகளும், சினிமாத்துறையினரும் கடனில் தான் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். நாங்கள் மட்டுமா கடனில் இருக்கிறோம். இந்தியாவே கடனில் இருக்கிறது. தமிழகமே கடனில் இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.