நீட்  தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு  திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் , குழுமூரை சேர்ந்த  அனிதா பிளஸ் 2,  பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக கஷ்டப்பட்டு  படித்து வந்த அனிதா,  நீட் என்ற அரக்கன் அவரது வாழ்வில் விளையாடிவிட்டான்.

கிராமப்புற மாணவியான அனிதா நீட் நுழைவு தேர்வு எழுதியதில் 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். 

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில்தான்  மருத்துவ கலந்தாய்வு நடத்து வேண்டும் என  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனிதாவின் குடும்பத்துக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.