அ.ம.மு.கவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்துவிட்டதாகவும் இடைத்தேர்தல்கள் மட்டும் அல்ல நாடாளுமன்ற தேர்தலுக்கும் தயாராகிவிட்டதாக டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். சென்னையில் அ.ம.மு.கவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட அளவிலான தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தேர்தல் பொறுப்பாளர்கள் தவிர வேறு யாருக்கும் உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை.

மாவட்டச் செயலாளர்கள் மட்டும் அல்ல உயர்மட்ட நிர்வாகிகள் கூட கூட்டம் நடைபெற்ற அரங்கில் அனுமதிக்கப்படவில்லை. சில தேர்தல் பொறுப்பாளர்களை தனியாக அழைத்து தினகரன் ஆலோசனை நடத்தினார். அதிலும் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல் பொறுப்பாளர்களும் அடங்குவர். தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்த தினகரன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சில ஆலோசனைகளையும் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

அதிலும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் தற்போதே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்திற்கான வேட்பாளர்களை தினகரன் தெரிவித்துவிட்டதாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதே போல் சில குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை அழைத்து அந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருப்பதாகவும், அது குறித்தும் கருத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது.

 கூட்டத்திற்கு பிறகு பேசிய தினகரன், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சிறப்பாக இருந்தது என்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது வரை தங்கள் அ.ம.மு.கவில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்திருப்பார்கள் என்று நம்புவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகவும் தினகரன் கூறினார். மேலும் இடைத்தேர்தல்களை சந்திக்க அ.ம.மு.க தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் அ.ம.மு.க வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அங்கு வெற்றி உறுதி என்றும் தினகரன் கூறினார். இடைத்தேர்தல்கள் மட்டும் அல்ல நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் தாங்கள் தயாராக இருப்பதாக தினகரன் அறிவித்தார்.