தற்போது நடந்து வரும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளையை மக்கள் மறக்கமாட்டார்கள் என்று தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் எச்சரித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து பேசுகையில், ‘முதல்வரைப் பார்க்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்' ஜாக்டோ ஜியோ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ‘என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். முதல்வரை சந்திக்க முடியாது' என்று ஆளும் தரப்பு உதாசீனப்படுத்தி வருகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் தான் பிரச்னை எழுந்துள்ளது. ஆனால், அது குறித்து இந்த அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு உரிய தீர்வு காண அதிமுக அரசுக்கு எண்ணமில்லை. 

இந்தப் போராட்டத்தால் கொடநாடு விவகாரம் மறக்கப்பட்டுவிடும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். இன்னும் எத்தனை விஷயங்கள் வந்தாலும், கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மக்கள் மறக்கமாட்டார்கள். தேர்தல் நேரத்தில் தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்து மக்கள் பதிலடி கொடுப்பார்கள்' என அவர் எச்சரித்துள்ளார்.