*எங்க தாத்தா காலத்துல இருந்து எங்ககுடும்பம் காங்கிரஸ். காமராஜர் கூட பழகிய குடும்பம். பல எம்.பி., எம்.எல்.ஏ.வை பார்த்திருக்கிறோம். மன்றாடியார் குடும்பத்தைச் சேர்ந்த பட்டக்காரர்கள் கரூர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்திருக்காங்க. அவங்களே எளிமையா இருந்து  மக்களை மதிச்சாங்க. ஆனா ஜோதிமணி மாதிரி தலைக்கனம் பிடிச்ச எம்.பி.யை பார்த்ததில்லை இந்த தொகுதி. -மகேஷ் (அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர்)

*விவசாயிகளின் பாடு இந்த நாட்டில் பெரும்பாடாகிக் கொண்டிருக்கிறது. அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல், கொள்முதல் நிலையங்களில் இரவு, பகலாக காத்திருக்கின்றனர். காரணம், கொள்முதல் நிலையங்களில் போதிய அளவு சாக்குகள், சணல், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. லாரிகளுக்கு மாமூல் வாங்குவதுடன்,  ஒரு மூட்டை நெல்லுக்கு நாற்பது ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. -இரா.முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

*ஈழத்தில் மேதகு பிரபாகரனை சந்தித்தேன். சந்திப்பு முடிந்ததும் படம் எடுக்கும் படலம். அவரோடு படம் எடுத்துக் கொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? நானும் படம் எடுக்க தயாராகி, அவர் அருகே நின்றேன். உடனே அவர் என்னிடம் ‘ஒரு நிமிடம்’ எனச்சொல்லி உள்ளே போனார். முகம் கழுவி, அழகுபடுத்திக் கொண்டு வந்தவர், ‘இயக்குநர் கூட நின்னு படம் எடுக்கிறோம். கவமா எடுக்கணும் இல்ல!’ என்றார் பலத்த சிரிப்போடு.  சீமான் (நாம்தமிழர் கட்சித் தலைவர்)

*நாடார் சமுதாய மக்கள், இந்து மற்றும் கிறுத்துவ மதத்தைத் தழுவியிருந்தாலும் கூட இன்றுவரை ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை கெடுக்க இப்போது ஒரு கும்பல் புறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் இந்த வேலையை கச்சிதமாகச் செய்து வருகிறார்கள். அர்ஜூன் சம்பத்தின் கருத்தினையும் இப்படி பிரித்தாளும்  முயற்சியாகவே பார்க்க வேண்டும். -ஸ்டீபன் (நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்)

*இப்போதெல்லாம் எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் பெரிதாய் பேசாமல் மவுனமாகவே இருக்கிறார் வைகோ. சமீபத்தில் ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த உயர்நிலைக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தின் முடிவிலும் கூட ‘நான் பேசும் மனநிலையில் இல்லை.’ என்று சொல்லிவிட்டாராம். - பத்திரிக்கைச் செய்தி

*சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிராமணர், பத்திரிக்கையாளர்களை விமர்சிக்கும் நோக்கில் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேசினார். பின் ‘ஸ்டாலின்  சொல்லியதால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ எனவும்  கூறினார். இதிலிருந்து, பாரதி தெரிவித்தது 100 சதவீதம் ஸ்டாலினின் வார்த்தைகள்தான் என தெரிகிறது. எனவே அதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.  -பொன்.ராதாகிருஷ்ணன் (மாஜி பா.ஜ.க. அமைச்சர்)

*ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என்பது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மடத்தனம். ‘எங்கள் ஊரில் மின்சார வசதியே இல்லாத போது, ஜி.எஸ்.டி. விண்ணப்பத்தௌஇ ஆன்லைனில் எப்படி தரவேற்றம் செய்வது?’என ராஜஸ்தானின் பார்மரில் இருந்து வந்த ஒருவர் என்னிடம் கேட்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?- சுப்பிரமணியன் சுவாமி (பா.ஜ.க. எம்.பி.)

*என் கைது தொடர்பாக அமைச்சர் வேலுமணியிடம் கேட்டால், ‘இ.பி.எஸ்.சிடம் கேளுங்கள்’ என்பார். இ.பி.எஸ்.சிடம் கேட்டால் ‘ஓ.பி.எஸ்.சிடம் கேளுங்கள்’ என்பார். ஓ.பி.எஸ்.சிடம் கேட்டால் ‘பா.ஜ.க. பிரஷர்’ என்பார். இவர்கள் அத்தனை பேருமே நாடகக்காரர்கள். -கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க. மாஜி எம்.பி.)

*இந்தியாவில் இரைச்சல் நிறைந்த பெருநகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது! என ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு வாகனங்களின் இரைச்சல்தான் காரணம். அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். -  டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

*மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான என சந்திப்பு சிறப்பாக இருந்தது. டில்லியின் வளர்ச்சி தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். டில்லியின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட இருவரும் முடிவு செய்துள்ளோம். -அரவிந்த் கெஜ்ரிவால் (டில்லி முதல்வர்)
: