yet this problem is not solved
கோடைகாலம் வந்துவிட்டாலே சூட்டினால் ஏற்படும் நோய்களை சமாளிப்பது சிரமமாகிவிடும். கோடை காலம் முடிந்தும் கோடையின் தாக்கம் முடியவில்லை. இதனால் மக்கள் இன்னமும் பல பிரச்சனைகளால் அவதிப்படுகிறனர்
சன் ஸ்ரோக்
கடும் வெயிலினால் எற்படும் மயக்கம் இதனையே சன் ஸ்ரோக் என்கிறோம். சன் ஸ்ரோக் வந்தால் உடனடியாக மூளை பாதிக்கப்படும். அல்லது மரணம் ஏற்படும். வெயிலில் குழந்தைகள் விளையாடுவதால் எற்படுகிறது.
பெரியவர்கள் வெயிலில் வேலை செய்வது, வெயிலில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவது இதயநோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பாக பீட்டா ப்ளாக்கர்ஸ், டையோரிட்டிக்ஸ் போன்றோருக்கு வரும்.
உடலிலுள்ள நீர் வற்றுவதால் திசுக்கள் பாதிப்படையும் இதோடு மூளையும் செயலிழந்து போகும். குமட்டல், மயக்கம், உடல் உஷ்ணம்,
பேச்சு குழறுவது போன்றவையே அறிகுறிகள். இதற்கு சிகிச்சையை விட முதலுதவியே முதலில் அவசியம். இறுக்கமான உடை அணிந்திருந்தால் தளர்த்தி, காற்று படும்படி நோயாளியை படுக்க வைக்க வேண்டும்.
குளிர்ந்த நீரை துணியில் நனைத்து தலை,அக்குள், மார்பு, தொடை போன்ற இடங்களில் போட வேண்டும். முதலுதவிக்கு பின் மருத்துவரிடம் செல்வதே நல்லது.
கண் வலி (மெட்ராஸ் ஐ).
இடைவிடாமல் தொலைக்காட்சி, கம்யூட்டர் பார்ப்பது, சரியான உணவு முறையைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமித் தொற்று ஆகிய காரணங்களால் கண் நோய்கள் ஏற்படுகின்றன.
கோடை காலத்தில் அதிகம்பேரை அவஸ்தைக்குள்ளாக்குவது ‘மெட்ராஸ் ஐ’என்னும் கண்வலி. இதனால் கண் சிவந்துவிடும்.
ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விட வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கண்ணில் விட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கண் நோய் வந்தவர்களுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்பட்டு தலைவலி உண்டாகும். இந்த சமயத்தில் கண்களை கசக்குவது கூடாது என்று எச்சரிக்கின்றார்.
இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
கண்ணில் கட்டி
கண் இமைகளில் கட்டி வருவதற்கு காரணம் இமைப்பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக உருவாகிறது. திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது. கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்களில் கட்டி ஏற்பட்டால் களிம்பு,சொட்டு மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் கட்டிக்கு தீர்வு காணலாம். வலி இருப்பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
கண் இமை வீக்கம்
கண்கட்டி, பூச்சிக்கடி, எறும்புக்கடி, கண்நீர்ப்பைக் கட்டி போன்ற காரணங்கள் மற்றும் சளி, சைனஸ் போன்ற உடல் நோய்கள்,சிறுநீரகம், இதய நோய்களாலும், உடலில் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் கண் இமைகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கண் வலி, கண்மை அலர்ஜி, கண் சொட்டுமருந்து அலர்ஜி ஆகியவற்றாலும் இமையில் வீக்கம் ஏற்படும். கிருமித் தொற்று கண் இமை ஓரங்களில் அரிப்பு ஏற்படுதல்,இமை ஓரங்கள் தடித்து வீங்குதல் போன்ற பிரச்னைகள் கிருமித் தொற்றால் ஏற்படும்.
இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை காலையில் குளிப்பதற்கு முன்பாகவும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல்
வெயிலில் வெகுநேரம் இருப்பது, நிற்பது, நடப்பது, உட்கார்ந்திருப்பது. குறைந்த அளவே தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்குவது, காரவகை உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், போன்ற பல்வேறு காரணங்களால் நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் ஏற்படும்.
அதிக வியர்வை
மலக்கட்டிகள், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, சர்க்கரை அளவு குறைதல், ரத்தஅழுத்தம் குறைதல், மாரடைப்பின் முன்குறி, பயம் போன்றவற்றால் அதிவியர்வை ஏற்படலாம்.
மஞ்சள் காமாலை
அசுத்தமான குடிநீரைக் குடிப்பது, சுகாதாரமற்ற, சரியாக வேகாத உணவை உட்கொள்வது, தரமற்ற குளிர்பானங்கள், மது,புகையிலையை அதிகமாகப் பயன்படுத்துவது, வைரஸ் தொற்றுக் கிருமிகள், கலப்பட உணவு - திண்பண்டங்களை உண்பது, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றால் மஞ்சள் காமாலை வரலாம்.
வாய்ப் புண், வயிற்றுப் புண்
மிகவும் சூடாக சாப்பிடுவது, சாப்பிடாமல் பட்டினி இருப்பது, நேரம் தவறிச் சாப்பிடுவது, நோய்த்தொற்றுக் கிருமிகளாலும், சத்துக் குறைபாடு, மருந்துகளின் ஒவ்வாமை, நீண்ட நாட்கள் மருந்து சாப்பிடுவது, தீராத மலச்சிக்கல், போன்றவற்றால் இவை வரும்.
மேற்கண்ட நோய்கள் கோடைக்காலத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. இவை வராமலும், வந்தபின் தீர்க்கவும் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால், கோடை வெயிலுக்கு அஞ்ச வேண்டியதில்லை:

காலை எழுந்தவுடன் 200 மி.லி. குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும். இளநீர்,
தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம். காலை, இரவு இரு வேளை குளிக்கவும்.டைப்பாய்டு, அம்மை நோய்கள்,மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு தேவையான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
