Asianet News TamilAsianet News Tamil

தினமும் சளியால் அவதிப்படுகிறீர்களா? குளிர்கால பிரச்சனைகளும், யோக தரும் தீர்வுகளும்!

குளிர்கால பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், கரோனாவிலிருந்து நம்மை தற்காத்து கொள்வதற்கும் நம்மை நாம் பாஸிட்டிவான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். 

Winter season easy yoga exercises
Author
Chennai, First Published Jan 17, 2022, 6:24 AM IST

மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஆனால், உலகை அச்சுறுத்தும் கரோனா என்கின்ற கொடிய நோயின் அறிகுறிகளாலும், சிலருக்கு சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து, நம்மை தற்காத்து கொள்வதற்கும், குளிர்கால பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் நம்மை நாம் பாஸிட்டிவான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், இன்றைய துரித உணவு பழக்கம், உடல் மெலிய சாப்பிடாமல் இருப்பது போன்றவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே, தங்களது உடம்பை கச்சிதமாக வைத்து கொள்ள 3 விதமான அற்புத யோகாவை பின்பற்றினால் சிறந்தது.  

Winter season easy yoga exercises

அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம்.

1. சர்வாங்காசனம்:

தரைவிரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்கவும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இரு உள்ளங்கைகளால் உடலை தூக்கி உயரே கொண்டு வரவும். அதாவது இரு உள்ளங்கைகளையும் இடுப்பில் வைத்தபடி கால்களை நேராக தூக்க வேண்டும். அப்போது முதுகு, இடுப்பு, கால்களை நேர் நிலையில் மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும்.

எந்த அசைவும் இல்லாமல் சீராக சுவாசிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருந்த பிறகு கால்களை மடித்து முதுகு பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை ஆரம்ப நிலைக்கு திருப்ப வேண்டும்.

2. உஜ்ஜயி பிராணாயாமம்:

கால்களை மடக்கி, உடலை நேராக நிமிர்த்தி தியான நிலையில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பின்பு இரு நாசி துவாரங்கள் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும். சில விநாடிகள் அதே நிலையில் இருந்துவிட்டு மெதுவாக மூச்சை வெளியே விடவும். அப்படி மூச்சு வெளிப்படும்போது ‘ஹா’ என்ற சத்தத்தை வெளியிடவும். இந்த மூச்சுப் பயிற்சி நுரையீரலை வலுப்படுத்த உதவும். அதில் தேங்கி இருக்கும் சளியை வெளியேற்ற உதவும்.

Winter season easy yoga exercises

3. அர்த்த மத்ஸ்யேந்திராசனம்:

தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். பின்பு இடது காலை வலது பக்கமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வலது காலை இடது காலுக்கு வெளிப்புறமாக கொண்டு வந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதே நிலையில் மூச்சை வெளியேற்றியபடி உடலின் மேல்பாகத்தை வலது பக்கமாக திருப்ப வேண்டும். அப்போது முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வலது கால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நிலையில் இயல்பாக மூச்சை உள் இழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

இன்றைய நவீன உலகில், தினமும், சாப்பிடுவது மற்றும் உறங்குவதைப் போன்று நடைப்பயிற்சியும் யோகாசனமும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ யோகாசனமும் அத்தியாவசியம். குளிர்கால பிரச்சனை மற்றும் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விருப்பம் கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த செய்தி உதவியாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios