புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி ஹெல்மெட் அணியாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகன விபத்துக்களை தடுக்கவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் கட்டாய ஹெல்மெட் சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக பாராத தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கு ஒரு சிலர் இன்றளவும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அவ்வாறாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து சோதனை செய்து  அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

இந்த சட்டம் சென்னையில் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் தருவாயில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் மெல்லமெல்ல ஹெல்மெட் கட்டாய முறை அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் ஒரு கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய ஹெல்மட் சட்டம் கொண்டுவர மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜராஜன் ஓர் அற்புதமான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.

அதாவது விருதுநகரில் ஹெல்மெட் அணியாமல் உள்ளே வரும் இருசக்கர வாகன ஓட்டிகளையும்  அதேபோன்று விருதுநகரில் இருந்து வெளியே செல்லும் வாகன ஓட்டிகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விருதுநகர் எல்லை பகுதிகளான சிவகாசி பைபாஸ், மதுரை பைபாஸ், கல்லூரி சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை உள்ளிட்ட 9 முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹெல்மெட் அணியாமல் நகருக்கு உள்ளேயும் அனுமதிக்கப்படுவதில்லை; வெளியே செல்பவர்களையும் அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் ஹெல்மெட் அணியாதவர்களை நகருக்குள் உள்ளே செல்ல விடாமலும், வெளியில் செல்ல விடாமலும் அவர்களை வழிமறித்து கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அன்பு கோரிக்கை வைத்து அபராதம் விதிக்காமல் போலீசார் அறிவுரை கூறி உள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ஒரு காரணத்திற்காகவே இதுவரை ஹெல்மெட் வாங்காத நபர்களும் ஆர்வமாக கடைகளுக்கு சென்று ஹெல்மெட் வாங்கி அணிந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விருதுநகர் மாவட்ட எஸ்பி அவர்களின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன