காதலர் தினத்தன்று.. எது காதல்? என்பதை உணரவைத்த நெஞ்சை உருக்கும் சம்பவம்..! 

காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய காதல் மனைவியின் நினைவாக தான் வாழும் வீட்டிலேயே ஐம்பொன்னில் சிலை வடிவமைத்து தினமும் வணங்கி வருகிறார் கணவர் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை.. நம்பி தான் ஆக வேண்டும். காதலர் தினமான இன்று இந்த அற்புத விஷயத்தை நாமும் தெரிந்து கொள்ளலாமே...

புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவருக்கு 1958 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது மனைவியின் பெயர் செண்பகவல்லி.

இந்த தம்பதியினருக்கு எட்டு பிள்ளைகள் இவர்கள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி உள்ளார் இவர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு செண்பகவல்லி உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.

தான் பெற்ற பிள்ளைகளும் அவரவர் வீட்டில் தங்கி இருப்பதால் தனிமையை உணர்ந்துள்ளார் சுப்பையா. அப்போது அவருக்கு தன் மனைவியின் நினைவு அதிகரித்துள்ளது. தன் மனைவியைத் தன் உடனே எப்போதும் இருக்கவேண்டும் என நினைத்து பார்த்த சுப்பையாவிற்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதன்படி ஐம்பொன்னால் ஆன சிலையை தன் வீட்டிலேயே வைத்து தன்னுடனே இருக்கும்படியும் தினமும் தன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் இந்த முடிவை எடுத்துள்ளார் சுப்பையா. 

அதன்படி மூன்று லட்ச ரூபாய் செலவில் மூன்றடியில் ஐம்பொன்னாலான மனைவியின் உருவம் பொதிந்த திருவுருவ சிலையை சிலையை தன் வீட்டிலேயே வைத்துள்ளார். 48 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் சுப்பையா இதுபோன்று செய்துள்ளார். இன்றைய தினம் காதலர் தினம். இளம் ஜோடிகள் தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தாலும் அந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும் சில ஆண்டு காலமே திருமண வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் பெரும்பாலானோர் விவாகரத்து வரை சென்று விடுகின்றனர். ஆனால் உண்மை காதல் எது என்று புரிந்துகொள்ள இந்த செய்தி கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு மேற்கோளாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்காது.. காதலர் தினத்தன்று எது காதல் என்பதை உணர்வதற்கு இந்த உண்மை சம்பவமே எடுத்துக்காட்டு..!