உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தேவையானது யோகாவா ? உடற்பயிற்சியா..? 

நாம் வாழும் இந்த இயந்திர வாழ்க்கையில் நம் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க தேவையான ஒன்றாக அமைந்துள்ளது உடற்பயிற்சி. ஆனால் ஒரு சிலர் யோகாவையும் செய்கின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி தேவையா அல்லது யோகா தேவையா என்பது குறித்து ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சரி வாங்க உடற்பயிற்சி நல்லதா அல்லது யோகா நல்லதா அல்லது இவை இரண்டுமே நமக்கு தேவையானதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உடற்பயிற்சி மற்றும் யோகா..!

உடற்பயிற்சி என்பது உடலில்ஒரு அசைவை ஏற்படுத்தும். தசைகளுக்கு நல்ல அழுத்தம் கொடுப்பதும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. யோகா என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல நம் மனம், நம் அறிவு, உணர்வு சார்ந்து இருக்கிறது. இதில் குறிப்பாக ஆசனங்கள் செய்யும் போது மிகவும் மெதுவாக உடல் அசைவுகள் இருக்கும். 

உடற்பயிற்சி செய்யும் போது அவசர அவசரமாக சுறுசுறுப்பாக செயல்பட வேண்டி இருக்கும். ஆனால் யோகாவைப் பொறுத்தவரையில் மிகவும் நிதானமாக உடலை வருத்திக் கொள்ளாமல் செய்யமுடியும். உடற்பயிற்சி செய்து முடித்த உடன் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சற்று புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். யோகா செய்யும் போது மன அமைதி பெறும். புத்துணர்வோடு இருக்கவும் முடியும்.

உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதுடன் உடல் உறுப்புகளை வலுப்படுத்தும். யோகா செய்யும் போது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உள் உறுப்புகளை திறம்பட செயல்பட வைக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது நம் கவனம் எதை நோக்கி வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு டிவி பார்க்கலாம்; பாடல் கேட்கலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் யோகா செய்யும்போது உடலையும் மனதையும்  ஒரே நிலையில் நிறுத்தும்.  இதனால் மூளையும் புத்துணர்ச்சி பெறும். மனதில் அமைதி உண்டாகும்

உடற்பயிற்சி செய்யும் போது தசைகளில் அழுத்தம் அதிகரித்து, ரத்த அழுத்தம் உயர்ந்து இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். ஆனால் யோகா செய்யும்போது ரத்தத்தின் ஓட்டமும் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடற்பயிற்சியின்போது சுவாசம் வேகமாக இருக்கும். யோகா செய்யும் போது பொறுமையாக மூச்சை உள் இழுத்து சிறிது நேரம் அப்படியே இருந்து பின்னர் மெதுவாக வெளியிடப்படும். இதனால் நுரையீரலின் பணி மிக எளிதாகிறது. நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனும் தங்கு தடையின்றி முழுமையாக கிடைக்கும்.

எனவே உடற்பயிற்சியும் அவசியம்.. யோகாவும் அவசியம்..எனவே காலை நேரத்தில் சிறிது நேரம் யோகா செய்வதும் மாலை நேரத்தில் தேவையான நேரத்திற்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதும் மிகவும் சிறந்தது.