கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குடகு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கும் குளிக்கவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கபினி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் நீர்திறப்பு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ள இந்த நிலையில், இன்று மாலை 7 மணி அளவில் ஓகேனக்களுக்கு  அதிக நீர்வரத்து எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்தும், பரிசல் இயக்கவும் தடை போடப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் இருந்து வெளியேறும் தண்ணீர் மேட்டூர் அணையை அடைந்து 100 அடியை எட்டினால் தண்ணீர் திறந்து விடப்படும் நிலை ஏற்படும். அவ்வாறு திறந்துவிட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடைவர். இதேபோன்று குற்றாலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.