தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று ஓரளவிற்கு உடல் தேறிய உடன் இந்தியா திரும்பினார் விஜயகாந்த்.

இந்நிலையில் கட்சி பிரச்சாரத்திற்கும், தொண்டர்களை சந்திப்பதையும் கூட முழுமையாக நிறுத்தப்பட்டது. காரணம் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதே. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் தன் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென பேசிய வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே... அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே... என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே.. அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

நாம் நான்கு தொகுதிகளில் போட்டி போடுகிறோம். கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என ஒரு வீடியோ பதிவு பதிவிடப்பட்டுள்ளது. இவருடைய வீடியோவை  பார்த்து தொண்டர்கள் மனம் நெகிழ்ந்து உள்ளனர்.