மக்களே அனல் காற்று அதிகம் வீசுமாம்..!  வெளியில் செல்லாதீர்கள்..! 

எப்போதுதான் கோடை வெயில் முடியுமோ என்ற ஏக்கத்தோடு பரிதவித்து வருகின்றனர் பொதுமக்கள். இதற்கிடையில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதிக அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் குடங்களை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று தண்ணீர் கிடைக்கும் இடத்தில் இருந்து பிடித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வெயிலில் நடமாடக் கூட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

அக்னி வெயில் முடிந்து விட்டாலும் இன்றளவும் வெயில் குறைந்தபாடில்லை. குறிப்பாக சென்னையில் ஒரு துளி கூட மழை பெய்யாமல் போனது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஏரிகளில் தண்ணீர் வற்றி உள்ளது. நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் தண்ணீர் வற்றி உள்ளதால் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீரும் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மேலும் அனல் காற்று வீசும் என்ற செய்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.