மழைக்காலங்களில் பாம்புகள் எளிதில் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன. அவற்றை விரட்டுவதற்கு தேங்காய் ஓடுகளை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் பாம்புகள்
மழைக்காலம் தொடங்கி விட்டாலே வீட்டிற்குள் பல பூச்சிகள் வரத் தொடங்கும். பூச்சிகள் மட்டுமல்லாமல் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் நுழைந்து விடும். இது கிராமங்களில் மட்டுமே நடக்கும் என பலர் நம்புகின்றனர். ஆனால் நகரங்களில் கூட மழைக்காலங்களில் பாம்புகள் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன. நகரங்களில் வீட்டிற்கு அருகில் காலி நிலம், வடிகால் அல்லது தோட்டம் இருந்தால் பாம்பு நுழையும் ஆபத்து அதிகமாக உள்ளது. மழை வெள்ளத்தால் பாம்புகளின் இருப்பிடங்கள் மூழ்கி விடுவதன் காரணமாக அவை வெதுவெதுப்பான மற்றும் பாதுகாப்பான இடங்களை தேடி வீட்டிற்குள் வருகின்றன. மழைக்காலங்களில் பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
வீட்டைச் சுற்றி தேவையற்ற பொருட்கள் விறகு, குப்பைகள், கட்டுமானப் பொருட்களை குவித்து வைக்காதீர்கள். இது பாம்புகள் ஒளிந்து கொள்வதற்கு சிறந்த இடங்கள் ஆகும். வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களையும் புதர்களையும் அவ்வப்போது வெட்டி தூய்மையாக வையுங்கள். புதர்கள் அதிகமாக இருந்தால் பாம்புகள் எளிதாக வீட்டிற்குள் வரக்கூடும். வீட்டின் வடிகால் மற்றும் கழிவு நீர் குழாய்களை வலை அல்லது மூடியால் மூடி வைக்கவும். இது பாம்புகள் வீட்டின் உள்ளே நுழைவதை தடுக்கும். வீட்டின் அருகே காலி மனை, தோட்டம், புதர்கள் இருந்தால் அதை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இலைகளின் சருகுகள், தென்னை மட்டைகள் ஆகியவை பாம்புகள் வசிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தருகின்றன. எனவே இவற்றையும் களைந்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாம்புகளின் வருகையை குறைப்பது எப்படி?
பாம்புகளுக்கு சில கடுமையான வாசனைகள் பிடிக்காது. குறிப்பாக பூண்டு, வெங்காயம், சூடம், நாப்தலின் மற்றும் சல்பர் போன்றவற்றை வீட்டின் நுழைவு வாயில்கள், ஜன்னல்கள் மற்றும் பாம்புகள் வர வாய்ப்புள்ள இடங்களில் வைப்பதன் மூலம் அவற்றை தடுக்கலாம். சுண்ணாம்பு, சூடம், மிளகாய்த்தூள், பூண்டு, வெங்காயம் ஆகிய கலவைகளை கலந்து வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தூவுவதன் மூலம் பாம்புகளை விரட்ட முடியும். பாம்புகள் பெரும்பாலும் உணவிற்காக எலிகளைத் தேடி வரும். எனவே வீட்டில் எலிகள் வராமல் பார்த்துக் கொண்டால் பாம்புகள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். தற்போது சந்தைகளில் பலவகையான பாம்பு விரட்டிகள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பாம்புகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கலாம். சில செடிகளின் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது. சிறியாநங்கை, பெரியாநங்கை, வேம்பு, சாமந்தி, கற்றாழை, துளசி போன்ற செடிகளை வளர்ப்பதன் மூலம் பாம்புகள் வருவதை குறைக்கலாம்.
பாம்புகள் வராமல் இருக்க செய்ய வேண்டியவை
வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் ஓட்டைகளை அடைத்து விடவேண்டும். இதனால் பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துகள் வீட்டிற்குள் வருவது தவிர்க்கப்படும். இரவு நேரத்தில் வீட்டின் சுற்றுப்புறம் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். வெளிச்சம் இல்லாத இருண்ட பகுதிகளை பாம்புகள் அதிகம் நாடும். பாம்புகளை நேரில் கண்டால் அதை தொடுவது, விரட்டுவது அடித்துக் கொல்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களை பார்த்து பாம்புகளை தாமாக பிடிக்க முற்படக்கூடாது. பாம்பு பிடி நிபுணர்கள் அல்லது வனத்துறையினரை தொடர்பு கொண்டு பாம்புகளை முறையாக அகற்ற வேண்டும்.
அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லை
பாம்புகளை விரட்டுவதற்கு தேங்காய் ஓடுகளை பயன்படுத்தலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் தேங்காய் ஓடுகள் பயன்படுத்தி பாம்புகளை விரட்ட முடியும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவுமில்லை. பாம்பு பிடி வளர்ப்பவர்கள் தேங்காய் ஓடுகளை அவற்றின் இருப்பிடமாக பயன்படுத்துகின்றனர். எனவே தேங்காய் ஓடுகள் பாம்புகளுக்கு மிகவும் ஏற்றது எனவும், அவை பாம்புகளை விரட்ட பயன்படாது எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்கள் மட்டுமே. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்களின் முக்கிய நோக்கமாகும்)
