இந்த பட்டாசு மட்டும் வாங்குங்க...அடுத்த வருஷம் எப்படி மழை வருதுன்னு பாருங்க...! 

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு இதையெல்லாம் தாண்டி நம் நினைவில் பிரதானமாக நிற்பதே பட்டாசுகள் தான். இந்த தீபாவளியை "காற்று மாசுபடாமல், தீமை இல்லா தீபாவளியாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இதற்கு ஒரு படி முன்னோக்கி வைத்துள்ள தமிழக தோட்டக்கலைத்துறை, இந்த தீபாவளிக்கு விதை வெடிகளை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கெனவே பாஸ்ட்புட் கலாச்சாரத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் காய்கறி,கீரைகள் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தற்போது பெருமளவில் எதிர்கொள்ளும் பிரச்னையாக காற்று மாசு உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண தன்னார்வலர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் என பலரும் எடுக்காத முயற்சி இல்லை. 

இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும், காய்கறிகள் சாகுபடி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, வெடி விதைகளை தோட்டக்கலை துறையினர் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இதற்காக பற்ற வைத்தாலே சரசரவென சுற்றும் சங்கு சக்கரத்தில் கத்திரி, வெண்டை, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி விதைகளையும், சர்ரென வானை நோக்கி பாயும் ராக்கெட்டில் நாவல், புளி உள்ளிட்ட மரங்களின் விதைகளையும் வைத்துள்ளனர். சுறுசுறுவர்த்தியில் கீரை வகைகளையும், பூஷ்வானத்தில் கனகாம்பரம், சூரியகாந்தி உள்ளிட்ட பூச்செடிகளின் விதைகளையும் பதுக்கி வைத்துள்ளனர். இந்த விதையின் விலை என்னவோ 5 ரூபாய் தான், ஆனால் இதை நாம் பற்றவைத்து வெடிக்க முடியாது. மாற்றாக மண்ணில் புதைத்து, தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். இயற்கையை பேண வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதற்காகத்தான் இந்த விதைகள் பட்டாசு வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தீபாவளி நன்னாளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பட்டாசுகளை வாங்கி வெடிப்பதை விட, இந்த 5 ரூபாய் விதை பட்டாசுகளை நட்டுவைத்து நலம் பெறலாம். இதற்காக சென்னைவாசிகள் எங்கும் அலையத் தேவையில்லை, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, மாதவரம், அண்ணாநகர், திருவான்மியூர் தோட்டக்கலை பண்ணைகள் ஆகிய இடங்களில் விதை வெடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. விலை அதிகமான விதைகள், விழிப்புணர்வு காரணங்களுக்காக ”விதை பட்டாசு” வடிவத்தில் நம்மை அழைக்கிறது. அதை வாங்கி மண்ணுக்கும் மனிதனுக்கும் நல்லது செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே உங்களிடம் உள்ளது.